பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முதல்நாள், பண்டிகைக் காலங்களில் வீட்டினரை நோய் அண்டி விடக்கூடாது என எண்ணி, “காப்பு கட்டுதல்” எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது “போகி” என அழைக்கப்படுகிறது. இந்நாளில் மழையால் உருவாகும் பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும் நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவர்.

காப்பு என்பதன் பொதுவான அர்த்தம் பாதுகாப்பு. ‘பொங்கல் காப்பு’ பற்றி அகத்திணை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

கிராமக் கோவில்களில், காப்புக் கட்டுதல் என்றால் வைக்கோல் புரியில் வேப்பிலைக் கொம்பு, மாவிலைக் கொம்பு களைச் செருகிக்கட்டி ஒரு நீண்ட மாலை போல் ஆக்கி கோவில் கூரையைச் சுற்றிக் கட்டுவார்கள். வீதிகளிலும் குறுக்கே கட்டுவார்கள். சிறப்பு நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும், கரகம் சுமப்பவர்களும் மஞ்சள் அல்லது காவி உடையணிந்து, கோவில் பூசாரியால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு விரலி மஞ்சளை நூலில் கட்டி, தங்கள் வலது கை மணிக்கட்டில் அணிந்த்து கொள்வார்கள்